கள்ளக்குறிச்சி கலவரத்தை தொடர்ந்து வேப்பூர் பகுதியில் கலவரம் ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்புடன் வருண் வாகனம் தயார் நிலையில் உள்ளது. திருச்சி மாநகர ஆணையர் அன்பு தலைமையில் 650-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சின்னசேலம் அடுத்த தனியார் பள்ளி விடுதியில் மர்மமான முறையில் 12.7.22 அன்று உயிரிழந்த விவகாரத்தில் பெற்றோர்கள் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சின்னசேலம் பள்ளியில் நேற்று கலவரம் மூண்டது.
இந்த நிலையில் பள்ளி மாணவியின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் என்பதாலும், பள்ளி மாணவிகளின் உறவினர்கள் 17.7.22 கடலூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலும், இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வேப்பூர், கழுதூர், தொண்டாங்குறிச்சி, பெரியநெசலூர் உள்ளிட்ட கிராமங்களில் பேருந்து நிலையம் முக்கியமான இடங்களில் போராட்டம், வன்முறை நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் கலவரம் ஏற்பட்டால் கட்டுப்படுத்த வருண் வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரிய நெசலூர் கிராமத்தில் சுற்றி உள்ள கிராமப் பகுதியில் உள்ள சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. கிராமத்துக்கு உள்ளே செல்லும் மூன்று வழிகளிலும் இரும்பு தடுப்பு வைத்து போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.