திமுக ஆட்சியில் மாநகராட்சி கட்டடங்களில் வைக்கப்பட்டிருந்த திருக்குறள் விளக்க உரை பலகைகளை அதற்குப் பின்பு வந்த ஆட்சியாளர்கள் அகற்றியதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில், கோ. திரு முருகன் என்பவர் எழுதிய “குறள் அமிர்தம்” – திருக்குறளுக்கு விளக்கவுரை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜிபி குழுமத்தின் தலைவர் வி ஜி சந்தோஷம் தொழிலதிபர் நல்லி குப்புசாமி கவிஞர் பிறைசூடன், விஐடி கல்வி குழும நிறுவனர் கோ.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வாயில் தோறும் வள்ளுவம்” திட்டத்தை கொண்டு வந்து திருக்குறளுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய விளக்க உரைகளை அரசு பேருந்துகள், மாநகராட்சி கட்டிடங்களில் எழுதி வைத்தோம். அதற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வந்த வந்த ஆட்சியாளர்கள் வாயில் தோறும் வள்ளுவம் திட்டத்தை செயல்படுத்தவில்லை எனவும் திருக்குறள் விளக்கவுரை பலகைகளை அகற்றியதாக குற்றம் சாட்டினார்.