ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 277 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
நேஷ்னல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
இந்நிலையில் அனுமதி பெறாமல் ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, எம்.எல்.ஏ செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு உட்பட 277 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.