பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தோஷ் ஜாதவ் என்ற நபர் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிற் போட்டியின் காரணமாக பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா காரில் சென்றுக் கொண்டிருக்கையில் மர்ம நபர்களால் துப்பாக்கியா சுட்டு கொல்லப்பட்டார். சித்து கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் தான், மூளையாக செயல்பட்டதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தோஷ் ஜாதவ் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் சந்தேக நபரான ஜாதவின் உதவியாளரையும் புனே போலீசார் கைது செய்துள்ளனர். ==அசாம் மாநிலத்தின் 4 மாவட்டங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகமது நபி குறித்த நுபுர் ஷர்மாவின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசாம் மாநிலத்தின் கச்சார் பகுதியில், ‘ஓவைசி ரசிகர் மன்றம்’ என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று 2 பேரணிகளை நடத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கச்சார் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்க கூடிய அச்சுறுத்தல்கள் உள்ள, மேலும் 3 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ====மரியுபோல் நகர அஸோவ்ஸ்டல் இரும்பாலையில், இன்னும் 200க்கும் மேற்பட்ட வீரர்களின் உடல்கள் மீட்கப்படாமல் உள்ளதாக, முன்னாள் தளபதி மக்சிம் ஸோரின் தெரிவித்துள்ளார். ரஷ்யா உடனான பரிமாற்றத்தின் அடிப்படையில், இதுவரை 220 உடல்கள் உக்ரைன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், எஞ்சிய உடல்கள் அங்கேயே கிடப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். அவற்றை எப்படியாவது மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறியுள்ள அவர், நாட்கள் கடந்து விட்டதால் உடல்களை அடையாளம் காண்பது கடினமான செயல் என்றும், டி.என்.ஏ. சோதனை மற்றும் படைவீரர்களின் சீருடைகள், சின்னங்கள் மூலம் கண்டறியலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.