மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளதன் அடிப்படையில் மீண்டும் அவருக்கு அந்த பணி வழங்கப்பட்டுள்ளது என்றும், இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்கிற எச்சரிக்கையும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனான அவசர ஆலோசனை கூட்டம் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு மற்றும் சுகாதாரத் துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளை அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக ஓமந்தூரார் மருத்துவமனையில் இதய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளியை நேரில் சென்று பார்த்த அமைச்சர், இந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தும், சால்வை அணிவித்தும் சிறப்பு செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்புகளை பெற்று, உறுப்புமாற்று அறுவை சிகிச்சை வருகிறது என்றும், கடந்த வாரங்களில் மட்டும் 2 மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், மதுரை மருத்துவ கல்லூரி டீன் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ள நிலையில் மீண்டும் அவருக்கு அந்த பணி வழங்கப்பட்டு உள்ளது என்ற அவர், அந்த மருத்துவர் கொரோனா காலத்தில் நன்றாக பணியாற்றியவர் என்கிற அடிப்படையில் ஒரு சில அறிவுரைகள் அவருக்கு வழங்கப்பட்டு, பணி மீண்டும் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தலைமை செயலக உத்தரவு இல்லாமல் மருத்துவ துறையில் தன்னிச்சையாக செயலப்படும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அவர், தற்போது மருத்துவர்கள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழியே போதுமானதாக இருப்பதாகவும் அதுவே தொடரும் என்றும் குறிப்பிட்டார்.