காற்று மாசை கட்டுப்படுத்த வரும் 18 ஆம் தேதி முதல் ரெட் லைட் ஆன், காடி ஆஃப் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
உலகில் கடுமையாக காற்று மாசு உள்ள நகரங்களில் டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பாக குளிர் காலங்களில் டெல்லியில் காற்று மாசு மிக கடுமையாக இருக்கும். அதன்படி குளிர் காலம் தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 18 ஆம் தேதி முதல் ரெட் லைட் ஆன், காடி ஆஃப் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் படி போக்குவரத்து சிக்னலில் வாகனம் நிற்கும் போது வாகனத்தை ஆஃப் செய்வதன் மூலம் காற்று மாசடைவதை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி அரசு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.இந்த ஆண்டும் காற்று மாசு அதிகமாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்த புதிய நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிகப்படியான மாசு வெளியேற்றத்தை கண்காணிக்கும் வகையில் பிரத்தியேகமான வடிவமைக்கப்பட்டுள்ள கிரீன் டெல்லி ஆப்பை மக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.