உக்ரைன் உடனான போர் தொடங்கி, இன்றுடன் 110 நாட்கள் ஆகியுள்ள நிலையில், டான்பாஸ் மண்டலத்தை கிரிமீயாவுடன் இணைக்கும் வகையில், ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதில் செவிரோடொனெட்ஸ்க் நகரம் ஏறக்குறைய ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. அங்குள்ள மிகப் பெரிய ரசாயன ஆலை மட்டுமே உக்ரைன் வசம் உள்ளது. மரியுபோலில் அஸோவ்ஸ்டல் இரும்பாலை போல், இதன் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தத் தயங்காது என்று கூறப்பட்டது.
இந்தநிலையில், இந்நகருடன் லிசிசான்ஸ்க் நகரை இணைக்கும் பாலத்தை அழித்து, போக்குவரத்தை முடக்கியதுடன், பொதுமக்கள் பதுங்கியுள்ள ரசாயன ஆலை மீதும், ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருவதாக லுஹான்ஸ்க் ஆளுநர் செர்ஹி கெய்டாய் தெரிவித்துள்ளார். இதனிடையே செவிரோடொனெட்ஸ்க்கில் போர் மிகக் கடுமையாக இருப்பதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த போரே டான்பாஸ் மண்டலத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.