பழனி நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 40 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கடைகளின் உரிமம் ரத்து செய்து நோட்ஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி நகரில் காந்தி மார்க்கெட், ரயில் நிலைய சாலை, மலை அடிவாரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 40 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைகளில் உரிமத்தை நகராட்சி அதிகாரிகள் ரத்து செய்து நடவடிக்கை எடுத்தனர். உடனடியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளை பூட்டிய அதிகாரிகள் அதற்கான உத்தரவை ஒவ்வொரு கடைகளின் முன்பாக ஒட்டினர். மேலும் கடைகளை தொடர்ந்து நடத்த விரும்பினால் காவல்துறையினரிடம் இருந்து தடையில்லா சான்று பெறவேண்டும், நகராட்சியில் தொழில் உரிமம் பெற்ற பின்னரே மீண்டும் கடை நடத்த வேண்டுமென அறிவுத்தியுள்ளானர். பழனி நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைகளை பூட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.