உரிய ஆவணங்கள் இன்றி ரூ.61 லட்சம் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 61 லட்சம் ரூபாய் பணத்தை ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்த விரைவு ரயில் நடைமேடை 4-ல் நின்றது. அப்போது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அந்த ரயிலில் வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த சாய் கிருஷ்ணா என்பவரின் உடமைகளை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சோதனை செய்தபோது அதில் சுமார் 61 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது.

அவர் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால், பணத்தை பறிமுதல் செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்கம் வாங்குவதற்காக ஆந்திராவில் இருந்து பணத்துடன் தான் வந்ததற்காக பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். எனினும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பணத்துடன் சாய் கிருஷ்ணாவை அவர்களிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே கடந்த 21 ஆம் தேதி விஜயவாடாவில் இருந்து வந்த ரயிலில் வந்த பயணியிடம் 78 லட்சம் ரூபாய் பணமும், 16 ஆம் தேதி அதே விஜயவாடாவில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 46 லட்சம் ரூபாய் பணமும் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!