மலேகான் குண்டு வெடிப்பில், ஆர்.எஸ்.எஸ் மீது பழி சுமத்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தற்போது வரை 13 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் சாட்சியளித்த ஒருவர், தாம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் துன்புறுத்தப்பட்டு, மிரட்டப்பட்டதாலே, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக பொய் சாட்சி கூறியதாக தெரிவித்தார். மேலும் யோகி ஆதித்யநாத் யார் என தெரியாத போதும், அவர் மீது பழிசுமத்தப் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினார். இந்தநிலையில் இத்தகவலை, வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்தரேஷ் குமார், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது பொய் பழி சுமத்திய அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.