நூல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்து டி.சுப்புலாபுரம் நெசவாளர்கள் 15 நாட்கள் வேலைநிறுத்தத்தால் தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான நெசவுக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு உயர்தர காட்டன் சேலைகள் மற்றும் வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர அரசு வழங்கும் வேட்டி சேலைகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் வேட்டி சேலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நூல் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இதன்காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் நெசவாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். மேலும் உற்பத்தி பொருட்களின் விலையையும் உயர்த்த முடியாததால் நெசவாளர்கள் நஷ்டமடைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

நூல்விலை உயர்வால் நெசவாளர்கள் பெரும் அவதியுற்று வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் நூல்விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள நெசவாளர்கள் 15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள தறிக்கூடங்கள் அடைக்கப்பட்டது. நூல்விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் நெசவாளர்கள் முடிவு செய்துள்ளனர். டி.சுப்புலாபுரம் நெசவாளர்களின் 15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 25 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என்று நெசவாளர்கள் தெரிவித்தனர்.

 

Translate »
error: Content is protected !!