2022 – 23ம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 1.40 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள், மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள இடங்கள் என மொத்தமுள்ள 10,425 மருத்துவ இடங்களை பூர்த்தி செய்வதற்காக மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப தேதியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
இதன் மூலம், நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் இன்று முதல் அக்டோபர் 3ம் தேதி வரை tnhealth.tn.gov.in மற்றும் tnmedicalselection.org என்ற இனையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு பின் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்படும்.