ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடான மோதலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க படைகள் பெரும் பக்கபலமாக இருந்து வந்தன.
இந்த சூழலில் முடிவில்லாமால் நீண்டு கொண்டே சென்ற இந்த போரில் இருந்து விலக முடிவு செய்த அமெரிக்கா தாலிபான்களுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
அந்த ஒப்பந்தத்தின்படி கடந்த மே மாத பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கின. ஜூலை மாத இறுதியில் 90 சதவீத படைகள் வெளியேறிய சூழலில் தாலிபான்கள் நாட்டை ஆக்கிரமிக்க தொடங்கினர். அதை தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 15ம் தேதி தாலிபான்கள் நாட்டை முழுமையாக தங்கள் வசமாக்கினர். அதன்பின்னர் 20 ஆண்டுகால உள்நாட்டு போரில் தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்த தாலிபான்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை அமைத்தனர். தாலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள இந்த அரசை பெரும்பலான உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிறுத்தியுள்ளன. அதே போல் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கும் கடனுதவியையும் சர்வதேச நிதியம் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்க மறுப்பதும், வெளிநாடுகளில் ஆப்கானிஸ்தான் நிதியை தொடர்ந்து முடக்குவதும் இந்த பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகிற்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று தாலிபான்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர்.