தொடங்கியது தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இக்கூட்டத்தொடரில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண்துறை பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. பின்னர், கடந்த 24ம் தேதி வரை இவ்விரு பட்ஜெட் மீதும் விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, சட்டசபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காக இன்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி, இன்று கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேரவை தலைவர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.