சொகுசு கப்பல் பயணத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்- அமைச்சர் தகவல்

 

சாகச சுற்றுலாவை முறைப்படுத்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், சொகுசு கப்பல் பயணத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாள்களுக்கு தகவல் அளித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு பல்வேறு ஏஜென்சிகள் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வருவதாகவும், இதை முறைப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது என்றும், ஏனென்றால் மலைகள், சுற்றுலாத் தளங்களில் பாதுகாப்பற்ற முறையிலும்,எவ்விதமான விதிமுறைகளும் கடைபிடிக்காமல் தங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், சாகச சுற்றுலா என்றால் ட்ரக்கிங், பாராசூட் போன்ற சாகச பயணங்களை செய்வதற்கு சுற்றுலா பயணிகள் விரும்புவதாக கூறிய அவர், இதைப் பயன்படுத்தி  போலியான ஏஜென்சிகள் சுற்றுலா பயணிகளை ஏமாற்றுவதாகவும், இதை முறைப்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அதேபோல், முறையாக பதிவு செய்துள்ள ஏஜென்சிகளை சுற்றுலா பயணிகள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடவும் சுற்றுலா துறை  திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சொகுசு கப்பல் சுற்றுலா பயணத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ள கூறிய அவர், ஜூன் மாதத்தில், சென்னை துறைமுகத்திலிருந்து சொகுசு கப்பல் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீண்டும் துறைமுகம் திரும்பும் வகையில் 2 நாள் சுற்றுலா திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும்,விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத்திட்டமும் தொடங்கப்படவுள்ளதாகவும், தனியார் சொகுசு கப்பல் மூலம் நடைபெறவுள்ள சுற்றுலா திட்டத்திற்கு சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் மதிவேந்தன் தகவல் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!