போடி கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 4 பேர் சிக்கிக் கொண்டனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகே அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சி உள்ளது. திருமலாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் 4 மாணவர்கள் அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சிக்கு குளிக்க வந்தனர்.
அப்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள குரங்கனி, முதுவாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில், அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களால், வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
பின் தடுப்பணையின் மதகுப்பகுதியில் ஏறி நின்று கொண்டிருந்த மாணவர்களை அங்கிருந்தவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாணவர்களை மீட்க போராடினார்கள்.
இவர்கள் சாதூர்யமாக செயல்பட்டு ஆற்றில் சிக்கித் தவித்த 4 மாணவர்களையும் உயிருடன் பத்திரமாக மீட்டனர். மேலும் மழைக் காலங்களில் ஆற்றுப் பகுதிகளுக்குச் சென்று குளிக்க வேண்டாம் என்று அந்த மாணவர்களிடம் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.