திருச்சியில் பெரியார் பிறந்த நாள் விழாவை ஒட்டி மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சேவை மாற்றப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் மக்கள் அதிகாரம் அனுப்பினர் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மனுதர்ம புத்தகத்தை எரிக்கப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் மனுதர்ம புத்தகத்தை எரித்தால் நாங்கள் பெரியாரின் புத்தகத்தை எரிப்போம் என பாஜகவினர் தெரிவித்திருந்தனர். இதனால் திருச்சி மாநகரில் உள்ள பெரியார் சிலைகள் முன்பு காவல்துறை பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதனால் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சுற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அங்கிருந்த கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அந்தப் பகுதியில் வரும் பேருந்து மற்றும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டு, சாலை நடுவே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.