என்.எல்.சி.-யில் கூடுதல் அனல் மின் நிலையங்களை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தடையில்லா சான்றை ரத்து செய்ய மறுத்த பசுமை தீர்ப்பாயம், என்.எல்.சி. மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தால் 660 மெகாவாட் திறன்கொண்ட 2 அதி தீவிர பழுப்பு நிலக்கரி அனல் மில் நிலையங்களை அமைக்க சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கிய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உத்தரவை ரத்து செய்யக்கோரி வேப்பங்குறிச்சியை சேர்ந்த பி. சுந்தரவதனம், மும்முடிசோழகன் கிராமத்தை சேர்ந்த ஆ.ராஜு ஆகியோர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதித்துறை உறுப்பினர் கே. ராமகிருஷ்ணன், நிபுண!த்துவ உறுப்பினர் சத்யகோபால் கொர்லபட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு, மக்கள் கருத்து கேட்பு கூட்டம், காற்றின் தரம், காப்புக்காடுகள் மற்றும் நீர் நிலை தொடர்பான ஆய்வுகள் முறையாகவோ முழுமையாகவோ நடத்தப்படாமல், அனல் மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் தடையில்லா சான்று கோரி என்.எல்.சி. நிர்வாகம் விண்ணப்பித்தாகவும், அவற்றை முறையாக ஆராயமல் மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் அனைத்து ஆய்வுகளும் முறையாக மேற்கொள்ளப்பட்ட பிறகே 660 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அதி தீவிர அனல் மின் நிலையங்களை அமைக்க 2018ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி சான்று வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது தீவிரமான மாசுபட்ட பகுதி இல்லை என்பதால் 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மட்டும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஏற்கனவே இயங்கிவரும் அனல் மின் நிலையங்களின் விரிவாக்கமாகத்தான் இந்த புதிய மின் நிலையம் அமைக்க அனுமதி கோரப்பட்டதாகவும், 25 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பாதிப்பு ஏதும் இல்லை என கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
என்.எல்.சி. தரப்பில் 160 ஏக்கர் பசுமை போர்வை பகுதியுடன் 52 ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும், 8733 கோடியே 49 லட்சம் ரூபாய்க்கு திட்டம் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கும்போது விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களும் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், தீவிர மாசடைந்த பகுதியோ அல்லது மாசை ஏற்படுத்தக்கூடிய ஆலைகளோ இல்லை என்பதால் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், சாம்பலை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதாலும், மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் தடையில்லா சான்றை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர். அதேசமயம், அருகிலுள்ள கிராமங்களில் சுகாதார சர்வே எடுக்க வேண்டும், நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியை உயர்த்த வேண்டும், அரசு மருத்துவமனைகளுக்கும், அப்பகுதியில் அதிகமாக உள்ள சிறுநீரக நோய் சிகிச்சைக்கும் நிதி வழங்க வேண்டும், மருத்துவ முகாம்களை நடத்துவது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தரமான சிகிச்சை மற்றும் மருந்துகள்வழங்குவது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென என்.எல்.சி. நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். பசுமை போர்வை பகுதியில் ஈக்கலிப்டஸ் போன்ற மரங்களுக்கு பதிலாக காற்றின் தரத்தை மேம்படுத்தக்கூடிய மூங்கில் மரத்தையோ அல்லது நமது நாட்டின் மரங்களைதோ வளர்க்க வேண்டுமெனவும் என்.எல்.சி.-க்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கிய நிபந்தனைகள் மீறப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் உத்தரவிட்டு, வழக்குகளை முடித்துவைத்துள்ளனர்.