அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் இன்று இறுதி செய்யப்பட உள்ள நிலையில் இ.பி.எஸ் அதிமுக தலைமை அலுவலகம் வருகை தந்து தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 5வது நாளாக இன்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பசுமை வழிச்சாலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்று அங்கு ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை சென்ற இபிஎஸ் மாலை சென்னை திரும்பினார். சென்னை வந்ததும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், பா வளர்மதி, கே.பி. அன்பழகன்,சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேற்று இரவு 11 மணி வரை ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து இன்று காலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முக்கூர் சுப்பிரமணியன், தளவாய் சுந்தரம் ஆகியோரும், சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் இபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுகுழுவிற்கான தீர்மானங்களை இறுதி செய்யும் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்று வருகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகம் வருவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.