எனது அரசியல் நிலைப்பாடு குறித்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்று, செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த், தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை இன்று சந்தித்தார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், சமூக இடைவெளி விடப்பட்டு அமைக்கப்பட்ட இருக்கையில் 40 நிர்வாகிகள் வரை மட்டுமே அமர்ந்திருந்தனர். முன் பகுதியில் ரஜினிகாந்த் தனி ஒருவராக அமர்ந்திருந்தார். தற்போதைய சூழலில் அரசியல் கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்கும், மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகளை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று நிர்வாகிகளிடம் ரஜினி கருத்து கேட்டார். அவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
எனினும், சில நிர்வாகிகளின் செயல்பாடு ரஜினிக்கு திருப்தி தரவில்லை. இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்தகட்டத்திற்கு செல்ல முடியும் என நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இந்த ஆலோசனை கூட்டம், இரண்டு மணி நேரம் வரை நீடித்தது. பின்னர் வெளியே வந்த ரஜினிகாந்த், அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
அதன்பிறகு, கார் மூலம் வீட்டிற்குச் சென்று, அங்கு மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலருடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, வீட்டின் முன்பு செய்தியாளர்களை ரஜினி சந்தித்தார்.
அப்போது ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். நானும் எனது பார்வையை தெரிவித்தேன். என்ன முடிவு எடுத்தாலும் என்னுடன் இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். நான் என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் தெரிவிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.