தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட தமிழக பாஜக… தேர்தல் அறிக்கையால் மக்கள் பெரும் கோபம்…!

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்.. சொந்த செலவில் பாஜக தற்போது சூனியம் வைத்துக்கொண்டுள்ளது. நேற்று பாஜக வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையில் உள்ள சில விஷயங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையின் பெயரிலேயே பெரியார் கொண்டு வந்த எழுத்து சீர்திருத்தலையை பயன்படுத்தாமல் பழையலையை பயன்படுத்தி பாஜக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

இதில் மட்டுமின்றி உள்ளே அறிக்கை முழுக்க பல இடங்களில் பாஜக அதிர்ச்சி தர கூடிய பல அறிவிப்புகளை குறிப்பிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பாஜகவின் இந்த அறிக்கைக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அப்படி என்னென்ன அறிவிப்புகளை பாஜக வெளியிட்டது?

பாஜக அறிக்கையில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள் பின்வருமாறு,

*வெளிமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் வீடு வழங்கப்படும்

*மாட்டிறைச்சி தடை

*கோவில் நிர்வாகம் அறநிலையத்துறையிடம் இருந்து நீக்கப்படும்

*மதமாற்ற தடை சட்டம்

*நீட் தொடரும்அதற்கு பயிற்சி மையம்

*மாணவர்களின் விருப்பத்திற்கு இணங்க கூடுதல் மொழி பாடம்

*பள்ளி பாடத்தில் ஆன்மீக நூல்கள் சேர்ப்பு போன்ற அறிவிப்புகளை பாஜக வெளியிட்டுள்ளது.

இதில் பாஜக வெளியிட்டு இருக்கும் முக்கியமான ஒரு அறிவிப்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் வீடு வழங்கப்படும் என்ற அறிவிப்புதான்.. மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. மாட்டிறைச்சி தடை, கோவில் நிர்வாகம் அறநிலையத்துறையிடம் இருந்து நீக்கப்படும், மதமாற்ற தடை சட்டம் போன்ற அறிவிப்புகளும் எதிர்ப்பை சந்தித்தாலும்.. இது ஒரு வகையில் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புக்களே.


இதுபோன்ற அறிவிப்புகளை பாஜக கண்டிப்பாக செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக மாட்டிறைச்சி தடை பற்றி தமிழக பாஜக அறிவிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதல் இணைப்பாக வெளிமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் வீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் பாஜக வெளியிட்டுள்ளது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.. தமிழர்களின் உணர்வுகளை சீண்டும் வகையில் பாஜக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெளிமாநில தொழிலாளர்களை தமிழகம் வர வைத்து, தமிழ்நாட்டிலேயே அவர்களை வேலை பார்க்க வைத்து, இங்கேயே தங்க வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக நெட்டிசன்கள் புகார் வைக்கிறார்கள். தமிழகத்தில் வடமாநில ஊழியர்களின் வாக்குகளை அதிகரிக்க வைக்கவே இப்படி வாக்குறுதிகளை பாஜக வெளியிடுவதாகவும் நெட்டிசன்கள் புகார் வைத்துள்ளனர்.

ஏற்கனவே கொரோனா லாக்டவுன், பொருளாதார சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் போது வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வருவதை அதிகரிக்கும் வகையில் பாஜகவின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது . பாஜகவின் மற்ற அறிவிப்புகள் கூட அதன் இந்து மத பற்று என்று ஒருவகையில் புறந்தள்ளிவிடலாம்.. ஆனால இந்த அறிவிப்பை ஏன் பாஜக வெளியிட்டது என்றே தெரியவில்லை.

உத்தர பிரதேசத்திலோ, பீகாரிலோ வெளிமாநில தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தருவோம் என்று சொல்லாத பாஜக இங்கு மட்டும் இப்படி ஒரு அறிவிப்பை எந்த நம்பிக்கையில் வெளியிடுகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தமிழர்களின் வாய்ப்புகளை பறிக்கும் அப்பட்டணமான முயற்சி.. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள்தான் அதிகம் உள்ளனர்.

ஏற்கனவே தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் போது வெந்த புண்ணில் பாஜக வேலை பாய்ச்சிவிட்டது என்று பலர் விமர்சனம் செய்துள்ளனர். வெளிமாநில தொழிலார்களின் நலன் என்று இதை எடுத்துக்கொண்டாலும், வடமாநிலங்களில் பாஜக ஏன் இதேபோன்ற அறிவிப்பை வெளியிடவில்லை, அங்கெல்லாம் தமிழர்கள், தென்னிந்தியர்கள் வேலை பார்க்கவில்லையா.. தமிழகத்தில் மட்டும் ஏன் இப்படி வாக்குறுதி அளிக்கப்படுகிறது பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Translate »
error: Content is protected !!