தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி! முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

பலத்த மழை வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு, ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தெலங்கானா மாநிலத்தில் பலத்த மழையை தொடர்ந்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துளது. அந்த மாநிலத்தில் மட்டும் மழை, வெள்ளத்திற்கு இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர். 

இச்சூழலில், மிகமோசமான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தெலங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தெலங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர்  அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!