தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சியின் கிளை அமைப்பு போல் மாறி செயல்பட்டு வருவதாக, சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பல்வேறு தருணங்களில் மத்திய தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜகவின் நீண்ட கால கூட்டணி தோழனாக இருந்து வெளியேறிய சிவசேனா கட்சியும் தற்போது அத்தகைய விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
குறிப்பாக, பீகார் சட்டசபை தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு ஆதரவான போக்கை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதாக, சிவசேனா குற்றம்சாட்டி இருக்கிறது. பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால், மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி தரப்பட்டது.
இதை பல்வேறு கட்சிகளும் விமர்சனம் செய்தன. தேர்தல் ஆணையத்திலும் இவ்விவகாரம் குறித்து முறையிட்டன. ஆனால், தேர்தல் ஆணையத்தின் விளக்கம் பாஜகவுக்கு சாதகமாகவே இருந்தது.
ஒரு கட்சியின் கொள்கை முடிவாக அறிவிக்கப்படும் வாக்குறுதி, தேர்தல் விதிமீறலாகக் கருதப்பட மாட்டாது என்று, தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில், மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “மத்திய தேர்தல் ஆணையம் சார்புடன் நடந்து கொள்கிறது. அது ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு கிளை அமைப்பு போலவே நடந்து கொள்கிறது.
எனவே, இனி தேர்தல் ஆணையத்திடம் இருந்து வேறு எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. தேர்தல் நேரத்தில் பீகாரில் நடப்பதை மகள் அனைவரும் பார்த்து வருகின்றனர். எனினும் கூட, தேர்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்படுவதாகவே பொதுமக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்” என்று கூறினார்.