கொல்கத்தா,
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியிலிருந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில்தான், நந்திகிராம் சட்டசபை தொகுதியில் போட்டியிடப்போவதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மார்ச் 9ஆம் தேதி அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 291 தொகுதிகளுக்கு என்று வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. இதில், 50 பேர் பெண்கள், 42 பேர் முஸ்லிம்கள், 79 பேர் தலித், 17 வேட்பாளர்கள் பழங்குடியினர் ஆகும். 80 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்குக்கூட போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சுமார் 24 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மறுபடி சீட்டு வழங்கப்படவில்லை. வயது முதிர்வு உள்ளிட்ட சில காரணங்கள் காரணமாக அவர்களுக்கு மறுபடி டிக்கெட் வழங்கப்படவில்லை. மமதா பானர்ஜி தற்போது பவானிபூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்த தொகுதியை விட்டுவிட்டு நந்திகிராம் செல்கிறார் மமதா.
ஜனவரி மாதமே, மமதா தான் நந்திகிராமில் போட்டியிட உள்ளதாக கூறினார். அதை தனது அதிருஷ்டமான தொகுதி என்றும் வர்ணித்திருந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மற்றும் அவரது திரிணாமுல் காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டுவந்ததற்கு விதை போடப்பட்ட இடம்தான் நந்திகிராம்.
நந்திராமில் பொருளாதார மண்டலம் கொண்டுவர கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுத்தது. இதை விவசாயிகள் எதிர்த்து போராடினர். 2007ம் ஆண்டு விவசாயிகள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் மம்தா பானர்ஜியின் 2011 மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் மையப் பொருளாக மாறியது.
அதேநேரம், நந்திகிராம் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர் சுவேந்து அதிகாரி–யின் கோட்டையாகும். அங்கு அவர் எம்எல்ஏவாக இருந்தார். ஆனால் இப்போது பாஜகவில் சேர்ந்துள்ளார். மம்தா பானர்ஜியை நந்திகிராமில் குறைந்தது 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்று பாஜக தலைமையிடம் சுவேந்து அதிகாரி, கூறியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான், மமதா அதே தொகுதியில் களமிறங்குகிறார்.