நவ. 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர்

கோவிட்19 தொற்று ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பள்ளிகள், வரும் நவம்பர் 2ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவியது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, மார்ச் 24ம் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது.

பின்னர் பல கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட்டன. வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள் உட்பட பெரும்பாலானவை திறக்கப்பட்டுவிட்ட நிலையில் கல்வி நிறுவனங்கள் இன்னும் முழுமையாக இயங்கவில்லை. கடந்த 7 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அதன்படி, பள்ளிகள் காலையில் மட்டுமே செயல்படும் என்றும், ஆனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்று நாட்களில் பாடம் நடத்தப்பட வேண்டும். பள்ளியில் 750க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

தென் மாநிலங்களில் ஆந்திரா மற்றும் கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. ஆந்திராவில் கடந்த மாதம் வரை தினமும் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது அதன் தாக்கம் சற்று குறைந்துள்ளதை அடுத்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

Translate »
error: Content is protected !!