பிரபல அணு விஞ்ஞானி படுகொலை… பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக சந்தேகம்!

ஈரான் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளது, வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவரும், மூத்த அணு விஞ்ஞானியுமான மொஹ்சென் பக்ரிசாதே, தலைநகர் டெஹ்ரான் அருகே, பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதை, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

ஈரானின் ரகசிய அணு ஆயுதத் திட்டங்களின் முக்கிய நபராக இருந்த ஃபக்ரிசாதே சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அப்போது அவரது பாதுகாவலர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் கடும் சண்டை நடந்தது. இதில் ஃபக்ரிசாதே பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் காலமானதாக, ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.

அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறிக்கொண்டே, உற்பத்தி செய்யும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவை ஈரான் அதிகரித்தாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த படுகொலை நடந்துள்ளது.

கடந்த 2010 மற்றும் 2012 க்கு இடையில்,ஈரானில் நான்கு அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலைகளுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் சந்தேகிக்கிறது. இச்சம்பவம், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Translate »
error: Content is protected !!