பீகார் முதல்வராக நிதீஷ்குமார் பதவியேற்பு! பாஜகவுக்கு 2 துணை முதல்வர் பதவிகள்…

பீகார் மாநில முதல்வராக, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதீஷ்குமார் பதவியேற்றார்; பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர்.

பீகார் சட்டசபைக்கு தேர்தலில், 243 இடங்களுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், பாஜக – நிதீஷ் கூட்டணி 124 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதில், பாஜக 74 இடங்கள், ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களை பெற்றுள்ளன.

எதிர்த்து களமிறங்கிய ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்களே கிடைத்தன. இதில் ஆர்.ஜே.டி 75, காங்கிரஸ் 19, இடதுசாரி கட்சிகள் 16 இடங்களை கைப்பற்றி உள்ளன.

அதன் பிறகு நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டசபை குழுத்தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், கவர்னர் பாகு சவுகானை சந்தித்து ஆட்சி அமைக்க, நிதீஷ்குமார் உரிமை கோரினார். அதன்பேரில் ஆட்சி அமைக்க நிதிஷ்குமாருக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், பாட்னாவில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்றார். அவருடன் 14 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

பாஜகவை சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகிய இருவரும் துணைமுதல்வர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத்தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். பீகார் முதல்வராக நிதீஷ் குமார் 7வது முறையாக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!