பொங்கலுக்குள் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். பொங்கலுக்கு பிறகு அதிரடி பிரசாரத்தில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளார். ரஜினிகாந்த் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31-ந்தேதி புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார்.
கடந்த 3-ந்தேதி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்து விட்டு அரசியலில் களம் இறங்கப் போவதையும் வெளிப்படையாக அறிவித்தார். இதன்பின்னர் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற ரஜினிகாந்த் படப்பிடிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
விரைவில் படப்பிடிப்பை முடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். வருகிற 31-ந்தேதி கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட இருப்பதால் 2 நாட்கள் படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டுவிட்டு 29-ந்தேதி ரஜினி சென்னை திரும்புகிறார். வருகிற 30-ந்தேதி தனது வீட்டிலோ அல்லது கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வைத்தோ ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
இதன் பின்னர் 31-ந்தேதி கட்சி தொடர்பான அதிரடி அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள். கட்சியின் பெயர், சின்னம், கொடி, பிரசார வியூகங்கள் உள்ளிட்ட விஷயங்களை ரஜினிகாந்த் அன்றைய தினமே அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வைத்தே ரஜினிகாந்த் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார். இதன் பிறகு 1-ந் தேதி மீண்டும் ரஜினிகாந்த் ஐதராபாத் சென்று ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்கிறார். பொங்கலுக்குள் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.
பொங்கலுக்கு பிறகு அதிரடி பிரசாரத்தில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளார். ரஜினிகாந்த் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றன. ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து பிரசாரம் செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளார்.
பிரசாரத்துக்கு குறுகிய காலமே இருப்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் குட்டி விமானம் அல்லது ஹெலிகாப்டரில் சென்று ரஜினி பிரசாரம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் ரஜினிகாந்தின் பிரசார பயணம் எப்படி இருக்கும் என்பது பற்றிய உறுதியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி அதில் வேட்பாளர்களை ஏற்றி மக்களிடம் ஓட்டு கேட்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். எந்தெந்த இடங்களில் கூட்டங்களை நடத்தலாம் என்பது தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் கட்சி தொடங்கிய பிறகு முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அல்லது திருச்சியில் இந்த மாநாடு நடைபெற வாய்ப்பு இருப்பதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய பிறகு முதல் மாநாட்டை மதுரையில் தான் நடத்தினார். ரஜினிகாந்தும் அவரது வழியை பின்பற்றி மதுரையிலேயே மாநாட்டை நடத்த கூடுதல் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் புதுக்கட்சி அறிவிப்புக்கு பிறகு புத்தாண்டில் அரசியல் களத்தில் அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.