மருத்துவ படிப்பில் இந்தாண்டு ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இல்லை என்று, உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது, 40 நாட்கள் ஆகியும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதம் செய்வது பெரும் சர்ச்சையாகியுள்ளது, இந்த விவகாரத்தில் ஆளுநர் உள் நோக்கத்துடன் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழக ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசும், திமுகவும் உச்ச நீதமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.
மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவக்கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
எனினும் இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துமாறும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். ஆனால் இந்த இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தக்கோரி தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், நடப்பு ஆண்டிலேயே இந்த இட ஒதுக்கீடை செயல் படுத்த உத்தரவிட முடியாது என்று கூறி, தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்து. இத்தீர்ப்பு, மருத்துவப்படிப்பு கனவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்துவிட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவக்கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும் என்றார்.
இப்பிரச்சினையில், மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே ஓ.பி.சி. பிரிவினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்தது. இதை மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று, வைகோ தெரிவித்துள்ளார்.
—