மருத்துவ மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பு, அவர்களுக்கு உதவுவது போல் திமுக அரசியல் நாடகம் நடத்துவதாக, முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த பிறகு, 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நனவாகியுள்ளது. இருப்பினும், ஒரு சில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதால், அவர்கள் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியது.
இதற்கிடையே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்று, அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். திமுக தலைவர் அறிவித்த சில மணி நேரத்திலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைத் தமிழக அரசே ஏற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் பயின்று தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பில் சேரக்கூட்டிய மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை உடனடியாக செலுத்தும் வகையில், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த நிதியில் இருந்து மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகத்திற்கே நேரடியாக செலுத்தப்படும்.
மேலும் மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பும் திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம் என்றும், திமுகவின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் முதல்வர் பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.