“இந்தியாவில் ஊடகச்சுதந்திரம் இல்லை” மோடிக்கு சர்வதேச பத்திரிகை சங்கங்கள் கடிதம்

இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் இல்லை என்று, பிரதமர் மோடிக்கு 2 சர்வதேச பத்திரிகை சங்கங்கள் கூட்டாக கடிதம் எழுதி இருப்பது, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆஸ்திரியா நாட்டை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகை நிறுவனம் (ஐபிஐ), பெல்ஜியத்தை சேர்ந்த சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (ஐஎஃப்ஜே) இரண்டும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையை செய்ததற்காக, அவர்கள் மீது தேசத்துரோக சட்டங்கள் பாய்ச்சப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுநோய் பரவிய பின்னர் ஊடகவியலாளர்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அரசு மீதான குறைகளை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர்களை ஒடுக்க, கொரோனா தொற்று காலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 25ம் தேதி முதல் இதுவரை, கொரோனா காலத்தில், 55 பத்திரிக்கையாளர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர் என்று, ஆஆர்ஏஜி குரூப் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுதந்திரமான மற்றும் விமர்சன ஊடகவியலாளர்களை துன்புறுத்துவதற்கு தேசத்துரோக சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது. இது சர்வதேச கடமைகளை இந்தியா மீறுவதற்கு ஒப்பாகும். பத்திரிகை பணி செய்ததை தேசத்துரோகம் என்ற பிரிவின்கீழ் கொண்டு சென்று உட்படுத்துவதும், நாட்டின் பாதுகாப்புக்கே ஊறு என்று கூறுவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை என்று, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் ஜனநாயக மாண்புகள் சீர்குலைக்கப்பட்டு வருவதாக இங்குள்ள சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் பலரும் குற்றம்சாட்டி வரும் சூழலில், சர்வதேச பத்திரிகை அமைப்புகள், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்று குற்றம்சாட்டி மோடிக்கே கடிதம் எழுதி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

Translate »
error: Content is protected !!