இது சம்மந்தமாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத்தலைவர் எம்.கே.பைஸி ஐக்கிய நாடுகள் சபை தலைமைச் செயலர் மற்றும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு – OIC தலைமைச் செயலருக்கும் அனுப்பியுள்ள கடிதங்களில் குறிப்பிட்டுள்ளதாவது;
மத்திய கிழக்கில் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டுள்ள போர்ப் பதற்றத்தை தணிக்கவும், உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும் அனைத்து முயற்சிகளையும் தாமதமில்லாமல் மேற்கொள்ள, ஐக்கிய நாடுகள் சபையும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் முன்வரவேண்டும் என்ற வேண்டுகோளை அவர் தெரிவித்தார்.
சட்டப்புறம்பாக யூதக் குடியேறிகளை குடியமர்த்தும் பொருட்டு ஜெருசலம் நகரிலுள்ள ஷைக் ஜர்ரா பகுதியில் இஸ்ரேல் போலீஸாரின் உதவியுடன் ஃபலஸ்தீன பூர்வகுடிகளை பலவந்தமாக வெளியேற்றியதால் ஏற்பட்டதே இப்போதைய பதற்றத்திற்கு முக்கியக் காரணமாகும் என்று கடிதங்களில் எம்.கே.பைஸி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஃபலஸ்தீன பூர்வகுடிகளின் பலவந்த வெளியேற்றம் போர்க்குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இத்தகைய சச்சரவுகளின் தொடர்ச்சியாக, ரமலான் மாத கடைசி வெள்ளி சிறப்புத் தொழுகையில் அல் அக்ஸா பள்ளியில் ஈடுபட்டிருந்த தொழுகையாளிகள் மீது இஸ்ரேல் போலிஸ் ரப்பர் குண்டுகளைப் பொழிந்து வன்மத்தைத் தீர்த்துக்கொண்டது.
இஸ்ரேலின் அடக்குமுறையைக் கண்டித்து ஹமாஸ் விடுதலைப் போராளிகள் கொந்தளித்தபோது காஸா பகுதியின் மீது இஸ்ரேல் குண்டுகளைப் பொழியத் தொடங்கி விலைமதிக்க முடியாத பல உயிர்களைக் காவுகொண்டது.
இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் உடனடியாக தலையிட்டு அப்பாவி மக்களின் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச அமைப்புகளிடம் எஸ்.டி.பி்.ஐ. கட்சி வேண்டுகோள் விடுப்பதாவது, “இஸ்ரேலின் முடிவே இல்லாத அடக்குமுறைகள் காரணமாக பலநூறு விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோவதைத் தடுத்திடும் பொருட்டு, சர்வதேச சமூகம் தலையிடாமல் போனால் அந்நாடு இனப்படுகொலையிலிருந்து பின்வாங்குவது கடினம். இஸ்ரேலின் அடாவடிச் செயல்களைக் கண்டித்து ஃபலஸ்தீன மக்களுக்கு உரிய நீதியும், அமைதியான வாழ்வும் கிடைக்க சர்வதேச சமூகம் உறுதிசெய்ய வேண்டும்”.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.