துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ. 1 கோடியே 13 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 422 கிராம் தங்கம், எல்க்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது 4 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் மரத்தூள் கொண்ட அட்டை பெட்டிகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 49 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 147 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். மேலும் 4 பேரின் சூட்கேசில் இருந்து ரூ.42 லட்சத்தி 4 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினர். அதுப்போல் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கேபிள் வயரில் ரூ.11 லட்சத்தி 87 ஆயிரம் மதிப்புள்ள 275 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். மேலும் ரூ. 9 லட்சத்தி 80 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினர். மேலும் 5 பேரிடமும் இருந்து ரூ. 1 கோடியே 13 லட்சத்தி 21 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 422 கிராம் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 5 பேரையும் கைது செய்து யாருக்காக கடத்தி வரப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.