தேர்தல் ஆணையம் பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – பொதுமக்கள் பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தல்
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரப்புரையில் ஈடுபட நேற்று (மார்ச்.31) கோவை வந்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக, அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான பாஜகவினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றதோடு மட்டுமல்லாமல், டவுன்ஹால் பகுதியில் கடைகளை மூட வலியுறுத்தி கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், பாஜக கட்சிக் கொடி கட்டப்பட்ட தடிகளால் வியாபாரிகள் சிலரையும் தாக்கியுள்ளனர். இந்த அராஜகங்கள் அனைத்தும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஊர்வலத்தில் வந்த பாஜகவினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, கொரோனா பேரிடர் போன்றவற்றால் கடந்த சில வருடங்களாக பெரும் பாதிப்பினை கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில்நிறுவனங்கள் சந்தித்து வரும் நிலையில், தற்போது தான் அவை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் அதனை கெடுக்கும் விதத்தில் பாஜக கலவர அரசியலை கையிலெடுத்துள்ளது. இதனால் பொது அமைதி மட்டுமின்றி, கோவையின் வர்த்தகமும் பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டிவரும். தேர்தல் பரப்புரையின் போதே இத்தகைய அராஜக செயலில் ஈடுபடுபவர்கள் நாளை வெற்றிபெற்றால் என்ன மாதிரியான களச்சூழல் நிலவும் என்பதை உணர்ந்து, பொதுமக்கள் பாஜகவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தின் அமைதியை கெடுக்க நினைக்கும் எந்த தீய சக்திகளையும் வாக்காளர்கள் அனுமதித்து விடக்கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த விவகாரத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தலையிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது விதிமீறல் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் மீதும் அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாஜக வேட்பாளர் மீதும் வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலங்களைப் போல தமிழகத்தில் கலவர அரசியல் கலாச்சாரத்தை கையில் எடுக்கும் பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.