சினிமாவில் வாய்ப்பின்றி பல ஆண்டுகளாக தவித்து வரும் வைகைப்புயல் வடிவேலு, விரைவில் பாஜகவில் இணைவார் என்ற தகவல் பரவி வருகிறது.
சினிமாவில் வாய்ப்பு இழந்தவர்கள், அரசியலில் தடம் பதித்து பிழைக்கும் வழியை தேடிக் கொள்வது வாடிக்கை. சட்டசபை தேர்தல் ஆறு மாதங்களுக்குள் நடைபெறவுள்ள நிலையில், திரை பிரபலங்களுக்கு அரசியல் கட்சிகள் வலைவிரித்து வருகின்றன.
இம்முறை தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என தமிழக பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதற்கேற்ப, வாய்ப்பில்லாத பல திரைப்பட நட்சத்திரங்களை குறிவைத்து தங்கள் பக்கம் இழுக்க, தமிழக பாஜக களமிறங்கி இருக்கிறது.
இந்த பட்டியலில் கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கெளதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் வரிசையில், அண்மையில் நடிகை குஷ்பு பாஜகவில் சேர்ந்தார்.
இந்நிலையில், காமெடி நடிகரான வைகை புயல் வடிவேலும் பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் கசிந்து வருகின்றன. ஏறத்தாழ 10 ஆண்டுகளாக புதிய பL வாய்ப்புகள் இல்லாமல், வடிவேலு வீட்டில் தான் உள்ளார்.
எனினும், அவருடைய பழைய காமெடிகள்தான் இன்றளவும் அனைவரது மனதிலும் இடம் பிடித்திருக்கிறது. எந்த மீம்ஸ்கள் எடுத்துக் கொண்டாலும் வடிவேலு இல்லாமல் வருவதில்லை.
இந்நிலையில் பாஜக வீசியுள்ள வலையில், நடிகர் வடிவேலுவும் சிக்கி இருப்பதாக, தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் அவர் பாஜகவில் சேர்ந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. எனினும், நடிவர் வடிவேலு தரப்பில் இந்த செய்தி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார் வடிவேலு. அவருடைய பார்வை அரசியல் பக்கம் திரும்பியதும் திரையுலக வாய்ப்புகளை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
—