தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு உரிய முடிவு அறிவிக்கப்படும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை தொடர்ந்து தமிழகத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. பின்னர் பல கட்டங்களாக இது தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் 9ம் கட்ட ஊரடங்கு அக்டோபர் 31 தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த சூழலில், அடுத்தகட்டத் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் பழனிச்சாமி கூறியதாவது: தமிழக அரசின் நடவடிக்கைகளால், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவில் இருந்து தமிழகம் விரைந்து மீண்டு வருகிறது.
சினிமா தியேட்டர்களை திறக்க வேண்டும் என, திரையரங்க உரிமையாளர்கள் கோரி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்க மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு இதுகுறித்து உரிய முடிவெடுக்கப்படும்.
இதேபோல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் அரசு ஆலோசித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும். தீபாவளிப் பண்டிகை காலத்தில் தொற்று ஏற்படா வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா நோய் பரவல் தடுப்பதில் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் தமிழக அரசை விமர்சித்தன. ஆனால், தகுந்த நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, தமிழகத்தில் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவதை எதிர்க்கட்சிகல் நிறுத்திக்கொள்ள வேண்டும். நோய் தடுப்புப்பணியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உயிரை பலிகொடுத்துள்ளனர் என்பதை, எதிர்க்கட்சிகள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.