தேனி மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்த தப்புகுண்டு பகுதியில் 265 கோடி ரூபாய் மதிப்பில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் மருத்துவமனை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா, சென்னை தலைமை செயலகத்தில் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு, காணொலி மூலமாக மருத்துவமனை கட்டிடத்திற்கு அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், எம்எல்ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.