தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சிதாராம் யெச்சூரி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்திபோது பேசிய யேச்சூரி, மனிதநேயத்தை சிதைக்க பாஜக வேலை செய்கிறது.
தமிழ்மொழியை மத்திய பாஜக அரசு அழிக்கப்பார்க்கிறது. தேர்தலுக்காக தமிழகம் வரும்போது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழ் மீது அக்கறை உள்ளது போல காட்டி கொள்கின்றனர். தமிழ்மொழி மீது அக்கரை இருப்பதாக நாடகம் ஆடுகின்றனர். மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக அரசு நீக்கப்பட வேண்டும்’ என்றார்.