தமிழகத்தில், வரும் நவ16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில், முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியாவில் கோவிட் தொற்று பரவத் தொடங்கியதும், கடந்த மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மாணவர்களின் கல்வி நலன் கருதி, ஜூன் மாதத்தில் இருந்து ஆன்- லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள சூழலில், 9,10,11,12 -ம் வகுப்புகள், கல்லூரிகள் ஆகியன, நவம்பர் 16ம் தேதி முதல் செயல்படும் என்று மாநில அரசு அறிவித்தது.
ஆனால், இதற்கு ஒருதரப்பு பெற்றோர் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பண்டிகைக் காலம் மற்றும் பருவமழைக் காலம் என்பதால் கோவிட் தொற்று அதிகரிக்கலாம் என்று பெற்றோர்கள் கவலை கொண்டுள்ளனர்.
நவம்பர் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்களின் பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்யாமல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இச்சூழலில், வரும் 16ம் தேதி கல்வி நிலையங்களை திறப்பதா வேண்டாமா என்று அரசு மீண்டும் பரிசீலிக்க தொடங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, நவம்பரில் திறப்பு என்பது தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார் ஐஏஎஸ், முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில், ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சிஇஓக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பள்ளிகளைத் திறப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இரண்டாம் அலை குறித்த அச்சம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவலை உள்ளிட்டவை குறித்து, இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.