நவ. 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! தியேட்டர், பூங்காக்கள் திறக்கவும் அனுமதி

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நீட்டிக்கப்படும் ஊரடங்கு நவ.30 வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள், புறநகர் ரயில்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (அக் 31) முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எனினும், இம்முறை மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9,10,11 ,மற்றும் 12 ஆம் வகுப்புகள் வரும் 16 ஆம்தேதி முதல் செயல்பட அனுமதிப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லுரி பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படும். அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம்.


வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு நவ. 2 முதல் அனுமதி தரப்பட்டுள்ளது. காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவ.1. முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள். மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி மாநிலம் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு (E-registration) முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

Translate »
error: Content is protected !!