உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. டிரம்ப் மற்றும் ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவும் சூழலில் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
உலகின் சக்திவாய்ந்த நாடாக திகழும் அமெரிக்காவில், 46வது அதிபரை தேர்வு செய்வதற்காக நாளை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், இதில் ஏற்கனவே 8 கோடியே 50 லட்சம் பேர் தங்களது வாக்குகளை முன்கூட்டியே செலுத்தி விட்டனர். இதற்கிடையே, தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியானா கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் விஸ்கான்சின், பென்சில்வேனியா, ஃப்ளோரிடா மற்றும் அரிஸோனா மாகாணங்களில், தற்போதைய அதிபர் டிரம்பைக் காட்டிலும் பைடன் முன்னணியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்த அளவில் என்.பி.சி நியூஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில், ட்ரம்ப்பிற்கு 42 சதவீத ஆதரவும், பிடனுக்கு 52 சதவீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.