நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக போலீசார் 2 முறை சம்மன் அனுப்பியும் மாணவியும், அவரது தந்தையும் விசாரணைக்கு ஆஜராகததால் இருவரையும் தனிப்படை அமைத்து கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நீட் மதிப்பெண் பட்டியலில் முறைகேடு செய்தது தொடர்பாக மருத்துவக் கலந்தாய்வு நடந்தது. இதில் கலந்து கொண்ட ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி தீக்சா 610 மதிப்பெண்கள் பெற்றது போல போலி மதிப்பெண் பட்டியலை கலந்தாய்வில் சமர்ப்பித்தார். அது தொடர்பாக கலந்தாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்த போது அது போலி என தெரியவந்தது.
அது தொடர்பாக பெரியமேடு போலீசில் மருத்துவக்கல்வி இயக்குநரகம் சார்பில் கடந்த 14ம் தேதியன்று புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரியமேடு போலீசார் மாணவி தீக்சா மற்றும் அவருடைய தந்தை பாலச்சந்திரன் இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த மோசடி விவகாரம் தொடர்பாக இருவரும் பெரியமேடு போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி இரண்டு முறை தீக்சாவுக்கும், அவரது தந்தைக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் இருவரும் இரண்டு சம்மனுக்கும் ஆஜராகவில்லை. அதனையடுத்து இருவரையும் தனிப்படை அமைத்து கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக தீட்சாவின் தந்தை, மருத்துவர் பாலச்சந்திரன் சொந்த ஊரான பரமக்குடியில் விசாரித்தபோது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது. ஏற்கனவே நீட் ஆள் மாறாட்ட மோசடி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.