இந்தியாவைவிட கொரோனா ஒழிப்பில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
சீனாவின் கடந்தாண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள், கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வேலையில்லாத திண்டாட்டம், பொருளாதார மந்த நிலையில் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்க, கொரோனா வைரஸ் நமது பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பதம் பார்த்து வருகிறது.
கொரொனாவை கட்டுப்படுத்த நீண்ட நெடிய ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டாலும், எந்த பலனும் இல்லை. கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறையவில்லை.
இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியன, கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி வருவதாக ராகுல்காந்தி புகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் தனது டிவிட்டர் பதிவில், பா.ஜ.க அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை. கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட, இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என்று, கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் கருத்து சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. பலரும் அவருக்கு ஆதரவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து பதிவிட்டனர். இதனால் டுவிட்டரில் இந்திய அளவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ராகுல் என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆனது.
கொரோனா விவகாரத்தில் ராகுலின் எச்சரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று ஒருசிலர் குற்றம்சாட்டினர். இன்னும் சிலர், பாகிஸ்தானை புகழ்வதற்காக இந்தியாவின் மதிப்பை கெடுத்துவிட வேண்டாம் என்று, ராகுலுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.