பீகாரில், நிதீஷ் குமார் அரியணையை இழப்பார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில்,பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெறும் என்பதும் தெரியவந்துள்ளது.
பீகார் சட்டசபையில் மொத்தம் உள்ள 243 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆர்.ஜே.டி – காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சார்பில், முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.
முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல் முறையே கடந்த அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3 ஆகிய நாட்களில் நடந்து முடிந்தது. 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல், 78 தொகுதிகளில் இன்று நடந்தது.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து, பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. பீகார் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி 120 இடங்களை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் – சிவோட்டர் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்.ஜே.டி காங்கிரஸ் – 120, ஜே.டி.யு. பாஜக – 116 இடங்களை கைப்பற்றும் என்றும் அது தெரிவித்துள்ளது.
ரிபப்ளிக் டி.வி நடத்திய கருத்துக்கணிப்பில் தேஜஸ்வி யாதவ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டணி 118 முதல் 138 இடங்கள் வரை பெறும்; பாஜக – ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 91 முதல் 117 இடங்களே கிடைக்கும் என்றும் ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.டி.டி.வி நடத்திய கருத்து கணிப்பில் 128 இடங்களை கைப்பற்றி ஆர்.ஜே.டி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான 5 கணிப்புகளில் 4ல் ஆர்.ஜே.டி கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் மோடி ஆதரவுடன் செயல்பட்டு வரும் நிதீஷ் குமாருக்கு, பீகாரில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஆட்சியை இழந்தால், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு அது பெருத்த அடியாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.