பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்டமாக நாளை, 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கூட்டணி அரசு பீகாரில் பதவியில் உள்ளது. பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
முதல் கட்டத் தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், நாளை (நவம்பர் 3) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி சாம்ப்ரா மற்றும் கிழக்கு, மேற்கு சம்பாரம் மாவட்டங்களில் நடந்த தேர்தல் பொது கூட்டங்களில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவரின் பெயரை குறிப்பிடாமல், இந்த தேர்தலில் இரு இளவரசர்களும் பதவியில் அமர்வதற்காக களத்தில் இறங்கி இருப்பதாக குற்றம்சாட்டினார். பீகாரின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள், இரட்டை எஞ்சின் கொண்ட அரசாக பாடுபட்டு வருவதாக மோடி குறிப்பிட்டார்.
மறுபக்கம், மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான, ஆர்.ஜே.டி.யின் தேஜஸ்ரீ யாதவ், நேற்று ஒரே நாளில் 17 பொதுக்கூட்டங்களில் பேசினார். தேஜஸ்வியின் தந்தையும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் இதற்கு முன் ஒரே நாளில் 16 பொதுக்கூட்டங்களில் பேசியதே சாதனையாக இருந்தது.