இந்தியா முழுவதும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், வரும் நவம்பர் மாத கடைசி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக , அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவை தொடர்ந்து, இந்தியாவில் மார்ச் மாதத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல கட்டங்களாக தளர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, கல்வி நிறுவனங்கள், கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் தளர்வு அறிவிப்புகளை தொடர்ந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், நாடு முழுவதும் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் எனப்படும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கைப் பணிகள் அனைத்தும், நவம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். வரும் டிசம்பர் 1-ம் தேதிக்கு முன்பாக, முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம நீட்டிக்கப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.