டெல்லி,
நாட்டில் அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த மிகப் பெரியளவில் சதித்திட்டம் நடப்பதாகவும் பாஜக அரசு குறித்துப் பல போலி தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சட்டை முன் வைத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைகிறது. வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கடந்த 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பாஜகவை தொடங்கினர். பாஜக தொடங்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த மிகப் பெரியளவில் சதித்திட்டம் நடப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே தொடர்ந்து தவறான மற்றும் போலியான செய்திகள் பரப்பப்படுகிறது. விவசாயிகளிடம் தங்கள் நிலம் கைப்பற்றப்படும். சிலரது குடியுரிமை பறிக்கப்படும். இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று பொய்யான தகவல்கள் மக்களிடையே பரப்பப்படுகிறது. அவ்வளவு ஏன் இந்திய அரசியலமைப்பே மாற்றப்படும் என்றும் சிலர் பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.
இதற்குப் பின்னால் முழுக்க முழுக்க அரசியல் தான் உள்ளது. நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்க வேண்டும் என்பதற்காக மிகப் பெரியளவில் சதி நடைபெறுகிறது. தவறான தகவல்களைப் பரப்பி மக்களிடையே அச்சத்தை உருவாக்க அவர்கள் முயன்று வருகின்றனர். இதை முறியடிப்பது பாஜக தொண்டர்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. பாஜகவினர் கவனமாக இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாஜக தேர்தலில் வெல்வதை மட்டுமே குறிவைத்துச் செயல்படுவதாக எழுந்துள்ள விமர்சனத்திற்கும் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். எதிர்க்கட்சிகள் தாங்கள் தேர்தலில் வெல்லும் இதுபோல எதையும் கூறுவதில்லை என்றும் அவர்கள் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாகவும் கூறினார். இப்படி சொல்பவர்கள் ஜனநாயகத்தின் முதிர்ச்சியைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் அவர்கள் மதிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக அரசு என்றும் தேசத்திற்கு முதலிடம் கொடுக்கும் ஒரு அரசு. பாஜக அரசு அனைத்து இந்தியர்களுக்குமான ஒரு அரசு. பாஜக அரசு தூய்மையான நோக்கத்துடன் இயங்கும் ஒரு அரசு. சிறந்த கொள்கை மற்றும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அரசு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பாஜகவின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், கிராமப்புற மற்றும் ஏழை மக்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.