டெல்லி,
முந்தைய அரசுகளின் தவறுகளை தேசிய முற்போக்கு கூட்டணி சரி செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச்சில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கோலோச்சிய மன்னர் சுஹெல்தேவின் சிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். வீடியோ காங்கிரஸ் மூலம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட மோடி பின்னர் உரையாற்றினார்.
“தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் முந்தைய அரசாங்கங்களின் தவறுகளை சரிசெய்ய முயற்சிக்கிறது. முந்தைய அரசுகள் துரதிர்ஷ்டவசமாக தகுதியான வீரர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திர போராளிகளை மதிக்கவில்லை. இந்தியாவின் உண்மையான வரலாறு இந்த நாட்டை அடிமைப்படுத்தியவர்களும் அடிமை மனநிலையுள்ளவர்களும் எழுதியது மட்டுமல்ல.
இந்தியாவின் வரலாறு, இங்குள்ள பொது மக்கள் நாட்டுப்புறக் கதைகளில் வைத்திருக்கிறார்கள். இது தலைமுறைகளால் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவைப் பாதுகாக்க, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது ஒரு துரதிர்ஷ்டம் எனக் கூறினார்.
மத்திய அரசு, சுஹெல்தேவ் நினைவாக ஒரு அஞ்சல் தலையையும் வெளியிட்டது. மேலும் தி சுஹைல்டேவ் எக்ஸ்பிரஸ் என்ற சூப்பர்ஃபாஸ்ட் ரயிலை இயக்கியது. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சுஹெல்தேவை கௌரவிக்க மோடி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.