மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தொடர்ந்து மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பீகார் சட்டசபை தேர்தலுக்கான பாஜ்கா பிரச்சார பொறுப்பாளராகவும் உள்ளார். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வந்த அவர், பல்வேறு இடங்களுக்கு சென்று கட்சியினருடன் தொடர் ஆலோசனைகளை நடத்தி, தீவிர களப்பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் நான் வேலை செய்து வருகிறேன். இப்போது எனக்கு சிறிது ஓய்வு தர வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் போலிருக்கிறது. எனக்கு கொரோனா பரிசோதனையில் நேர்மறை கண்டறியப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
அத்துடன், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவருமே கவனமாக இருக்க வேண்டும், முன்னெச்சரிக்கையாக தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தேவேந்திர ஃபட்னாவிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
50 வயதான ஃபட்னாவிஸ், பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்கு பாஜகவின் பொறுப்பாளராக உள்ளார். கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிராவுக்கும் பீகாருக்கும் மாறிமாறி சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.