மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்களுடன் சென்னையில் இன்று ஆலோசனை நடத்திய அதன் தலைவர் கமல்ஹாசன், வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கத் தொடங்கி இருக்கிறது. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன.
இந்த சூழலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமல்ஹாசன் தலைமை வகித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கமல், தேர்தல் கூட்டணியை நான் கவனித்துக் கொள்கிறேன். ஆனால் வெற்றிக்காக நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என்று கமல் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், வரும் தேர்தலில் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து மக்கள் நீதி மய்யம் களம் காணும் என்று கமல் பேசியதாக, இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் சட்டசபைத் தேர்தலில் கமல் கூட்டணி அமைத்து களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கமல் அறிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.